மாநகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் மகளிரிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மகளிர் இலவச பயணம் தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி, தனி ஒரு பெண் பயணி நின்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மகளிரிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது, பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மகளிருக்கான உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - பெண் பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது - பேருந்தில் இடமில்லை எனக் கூறி, ஏற வரும் மகளிரை கீழே இறக்கிவிடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு, தமது வழிகாட்டு விதிமுறையில் பட்டியலிட்டு உள்ளது.