விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததால் மருத்துவர் பலியானதாக வந்த புகாரில், தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரத்தைச் சேர்ந்த கிளீனிக் நடந்தி வந்த மருத்துவர், கொரோனா பாதித்து திண்டிவனம் காந்தி நகர் சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு போலி ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் சுகாதாரத்துறையில் புகாரளித்திருந்தனர்.
மாநில பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, கொரோனா சிகிச்சை மையமாகவும் செயல்பட தடை விதிக்கப்பட்டது.