தமிழக அரசின் கொடி நாள் நிதி என்று கூறி புதிய ரேசன் அட்டை வழங்க 500 ரூபாயை கமிஷனாக எடுத்து கரப்சனில் ஈடுபட்ட புகாருக்குள்ளான திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசால் தலா 2 ஆயிரம் ரூபாய் ரேசன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
புதிய கார்டுகளுக்கும் கொரோனா நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குஜிலியம்பாறையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்க அலுவலர் சரவணன் என்பவர், புதிய ரேசன் கார்டு கேட்டு வருபவர்களிடம் கொடி நாள் நிதி என கட்டாய கமிஷனாக 500 ரூபாய் பெற்றுக் கொண்டு ரேசன் கார்டு வழங்கியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலரை நேரடியாக சந்தித்த கம்யூனிஸ்ட்டு பிரமுகர் ஒருவர் பொது மக்களிடம் எப்படி கார்டுக்கு 500 ரூபாய் வாங்க முடியும், உங்களுக்கு சம்பளம் போடவில்லை யென்றால் என்னிடம் கூறுங்கள் நான் மாவட்ட ஆட்சியரிடம் பேசுகிறேன் எனக்கூறி தட்டிக்கேட்டார்.
விருப்பப்பட்டால் கொடுக்கலாம் கட்டாயமில்லை என்று அந்த அதிகாரி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இது தொடர்பாக வீடியோவை அந்த கம்யூனிஸ்ட்டு இயக்க தோழர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் புதிய கார்டுக்கு 500 ரூபாய் வசூல் வேட்டை நடத்திய குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணனை சஸ்பெண்டு செய்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.