தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பதிவு இல்லாமல் வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படுகிறது.
சென்னை முழுவவதும் 153 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதோடு, அண்ணா சாலை, வடபழனி, போரூர், அடையாறு, மத்திய கைலாஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, வாகன ஓட்டிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
சென்னை காவல் எல்லைக்குள் பயணிக்க இ-பதிவுமுறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 10 மணிக்கு மேல் இ-பதிவு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இ-பதிவு இல்லாதவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் சோதனையால், வடபழனி, போரூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கள்பாளையம் சோதனை சாவடியில் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களில் இ-பதிவு வைத்திருந்தவர்களை மட்டும் அனுமதித்த போலீசார், இ-பதிவு இல்லாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகர் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடி அமைத்து 919 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி சோதனைச்சாவடிகளில் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
தேனி நகர் பகுதியில் 17 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில், தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10மணிக்கு மேல் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அங்குள்ள கடைகள், சந்தைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
சேலத்தில் முக்கிய சாலைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், தேவையின்றி வரும் வாகனங்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
ஊரடங்கை மீறியதாக 212 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லையில் தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் திருக்குறள் எழுதச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.
மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாயும், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் சுமார் 150 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.