இதுவரை பிரசவத்திற்கு மட்டுமே இலவசமாக அறியப்பட்ட ஆட்டோவை, ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் ஆக மாற்றி, சென்னை வியாசர்பாடி சட்டக்கல்லூரி மாணவர்கள் செய்து வரும் மனிதநேய சேவை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் கிடைப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு, இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர்
சட்டக்கல்லூரி மாணவர்கள், வியாசை தோழர்கள் என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி 24 மணி நேரமும் இந்த இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர். ஏழை எளிய நோயாளிகள் மட்டுமல்ல உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் அவசரத் தேவைக்கு தங்களை எந்த நேரத்திலும் அழைக்கலாம் என்கிறார் வழக்கறிஞர் சரத்குமார்.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கும் வரையில் தங்கள் ஆட்டோக்களில் அமர்ந்து ஆக்ஸிஜன் தேவையை நோயாளிகள் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் உதவி வருவதாக தெரிவிக்கும் வழக்கறிஞர் சரத்குமார், ஆட்டோ உதவி தேவைப்படுவோர் 9791858078, மற்றும் 7305738473 ஆகிய செல்போன் எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை கொடுத்து அரவணைப்புடன் கூடிய கனிவான மனித நேய சேவையால் வியாசர்பாடி பகுதி மக்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றனர் இந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்.
கொரோனா நிவாரண பணிகளை அரசு வேகமாக முன்னெடுத்து வரும் நிலையில் தனியார் தொண்டு நிறுவனங்களும், அள்ளிக் கொடுக்கும் நிலையில் உள்ள செல்வந்தர்களும் கை கோர்த்தால் இன்னும் பலருக்கு சுவாசத்தை வழங்க இயலும், சமூகத்தில் முககவசம் அணிந்து கொரோனா சங்கிலியை உடைப்பதுடன், அனைவரும் உதவி கிடைக்க அரசுடன் கரம்கோர்த்து, தேவையான உதவிகளை செய்து கொரோனா உயிரிழப்பை தடுப்போம்..!