தூத்துக்குடி மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப்பகுதி மக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீதி வீதியாக கிருமிநாசினி தெளிப்பதுடன் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கி முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி நகரப் பகுதியில் வீதி வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை கனிமொழி எம்.பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தொடர்ந்து போல் பேட்டை, சிவன்கோவில் வீதி, இரண்டாம் கேட்,புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நகர் முழுவதும் தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தனை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் டிராக்டரில் சென்று வீதி வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
பஞ்சாயத்துத் தலைவர் சிதரம்பர லட்சுமி வீடு வீடாக சென்று கபசரக்குடிநீர் வழங்கும் பணியை மேற்கொண்டார். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சில்வர் பாத்திரங்களை எடுத்து வந்து கபசுரக் குடிநீரை பெற்றுச்சென்றனர்
அதே போல ஏரல் அடுத்த மேல மங்கலகுறிச்சி கிராமத்தில் முககவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்திய அக்கிராம இளைஞர்கள் வீதி வீதியாக சென்று கபசுர குடிநீரைக் கொடுத்தனர்
தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்து நிர்வாகிகளும், கிராம மக்களும் விழிப்புணர்வுடன் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.