கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாகக் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நொடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
மழையாலும் ஆற்று வெள்ளத்தாலும் எட்டாயிரம் ஏக்கர் பரப்பில் வாழை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அரபிக் கடலில் புயல் உருவானதன் எதிரொலியாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43 அடியைத் தாண்டியுள்ளது. தொடர்மழை காரணமாக நொடிக்கு 2485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து 2000 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் சிதறால், திக்குறிச்சி,குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் எட்டாயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. 200 ஏக்கர் ரப்பர் தோட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வைக்கலூரில் வெள்ளத்தின் வேகத்தில் ஆற்றங்கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையில் உள்ள வீடுகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திக்குறிச்சி சிதறால் சாலை வள்ளக்கடவு பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சில வீடுகளில் தண்ணீர் புகுவதைத் தடுக்க மணல்மூட்டைகளை அடுக்கியுள்ளனர்.
குழித்துறை தடுப்பணை மற்றும் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. திக்குறிச்சி மகாதேவர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூன்று நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலை ஓரங்களில் உள்ள மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
செங்கோட்டையில் 80 ஏக்கர் பரப்பில் விளைந்துள்ள நெற்பயிர்கள் கனமழையால் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு அருகே உள்ள தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பச்சையாறு அணை, நாங்குநேரியான் கால்வாய் ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பணகுடி அருகே உள்ள குத்தரப்பாஞ்சான் அருவியிலும் தண்ணீர் விழுகிறது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் குலை தள்ளிய பருவத்தில் உள்ள ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட வாழைகள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் விழுந்துள்ளன.
ஒரு வாழைக்கு 200 ரூபாய் என்கிற கணக்கில் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.