முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, கொரோனா தங்களை அண்டாது என்று நம்பும் அவர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி நூதன தண்டனை வழங்கலாம் என சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஊரடங்கில் கூடுதலாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் சிலர் விதிகளை மதிக்காமல் அரிசி வாங்க செல்கிறேன், அண்ணன் வீட்டுக்கு செல்கிறேன் என ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டு வெளியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலை 7 மணிக்கே பிரியாணி வாங்குவதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு தி.நகரில் வந்து போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சின்சியர் சிகாமணிகளும் இந்த வரிசையில் இருக்கின்றனர்.
நம்மை எல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாது என்ற அசட்டு தைரியத்தில் ஊர் சுற்றும் இவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பதை விட, கொரோனா வார்டுகளில் நோயாளிகளை கவனிப்பது, கொரோனா வார்டுகளை சுத்தம் செய்வது போன்ற கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்துவது சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான போரில், முன்களப் பணியாளர்கள் இரவு, பகலாக ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
நிலைமையின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படுவோருக்கு கண் எதிரே கஷ்டங்களை காட்டினால் தான் புரியும் என்பதால், அவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தொற்று பாதித்து மருத்துவமனைக்கு வருபவர்களை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மருத்துவமனைக்குள் கொண்டு செல்வது, இறந்தவர்களின் விவரங்களை பதிவேற்றுவது, நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க நேரிட்டால் அவர்களை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு அழைத்துச் சென்று வருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் இவர்களை ஈடுபடுத்தலாம் எனவும் யோசனை தெரிவிக்கின்றனர்.
அப்போதாவது கொரோனாவின் கோரத்தாண்டவம் பற்றி அவர்கள் முழுமையாக அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படட்டும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று சுனாமி போல வீசி வரும் இக்கட்டான சூழலில், தேவையை குறைத்துக் கொண்டு சுயக்கட்டுப்பாடுடன் வாழ்வதே சாமர்த்தியமாகும்...