தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கில் கூடுதலாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும், அதனை தீவிரப்படுத்தும் விதமாக சனிக்கிழமை முதல் கூடுதலாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் கடைகள் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே இயங்கும். ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நேரம் தற்போது 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் இறைச்சி விற்பனை காலை 6 மணி முதல் 10மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேற்கூறிய கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக டீக்கடைகள் இயங்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்கவும் அனுமதி இல்லை. மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அதேசமயம், ஏ.டி.எம். இயந்திரங்கள், பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அதிக தூரம் பயணிப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அறிவித்தபடி ஊரடங்கு காலத்தில், மே 16 மற்றும் மே 23 ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்குறிபிட்ட தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை கடைபிடிக்கபட்டு வந்த இரவு நேர ஊரடங்கும் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
வருகிற 17-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், வெளியேயும் பயணிக்க இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றிக்கு மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இனி கட்டாயம் https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை தொடரும்.
கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.