தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரப்படுத்துவது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக, அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட குழு அமைப்பது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது.
பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது.
அனைத்து கட்சியினரும் கள அளவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மக்களை வலியுறுத்த வேண்டும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க அறிவிக்கப்பட்ட தளர்வுகளைப் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுவதாகக் குறிப்பிட்டார்.
18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரும் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.