தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பொறுப்பேற்றுக் கொண்டார்.
கலைவாணர் அரங்கில் கூடிய சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரைப் பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமரச் செய்தனர்.
புதிய பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், இதற்கு முன் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆசிரியராக அப்பாவு மாணவர்களைப் பாகுபாடின்றி நடத்தியதைப் போலச் சட்டப்பேரவையிலும் பாகுபாடின்றி நடுநிலையாகச் செயல்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, பாஜகவின் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சிந்தனைச் செல்வன் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசினர்.
பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக மாண்போடு மரபு வழி நின்று பேரவையை அவர் வழி நடத்துவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும், அவர் தலைமையிலான அவையில் அமர்வதைப் பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகிய இருவரும் சென்னைக் கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.