செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூச்சுத்திண்றல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கணவனை மனைவி மட்டும் ஆசுவாசப்படுத்தும் நிகழ்வு அரங்கேறியது.
உதவிக்கு யாரும் வராத நிலையில் கணவனை காப்பாற்ற மனைவி போராடும் வீடியோ நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
அண்மையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 13 பேர் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றைக்குறையால் நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அதே மருத்துவமனையில் மற்றுமொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.
இங்கு மொத்தமாக 480 படுக்கைகள் உள்ளன. இதில், 325 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகும்.
இந்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாக கூறப்படுகிறது.
திங்கள் அன்று இரவு கொரோனா பாதித்து அங்கு சிகிச்சைக்கு வந்த தம்பதியை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மூச்சுத்திண்றல் ஏற்பட்டு, மயங்கிய கணவனை, மடியில் படுக்க வைத்து மனைவி மட்டும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
உதவிக்கு யாரும் வராத நிலையில் கணவனை காப்பாற்ற மனைவி போராடினார்.
சிகிச்சைக்கு வந்த மற்ற கொரோனா நோயாளிகளும் மரத்தடியிலும், மருத்துவமனை வாயிலிலும் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கேட்டு அங்கு காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டதால், நிலைமையை உணர்ந்து சிலருக்கு மட்டும் மாற்று ஏற்பாடு செய்து வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்க மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.