தமிழக முதலமைச்சராக நாளை வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகள்,மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 8 பேர் என 133 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன், திமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சட்டமன்ற திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், புதன்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தை, ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல், ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வழங்கினார்.
ஆளுநர் மாளிகையில், திறந்தவெளியில் வெள்ளிக்கிழமை காலை, 9 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவருடன், 28 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக, பதவியேற்பு விழா, எளிமையாக நடத்தப்பட உள்ளது. பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். விழாவில் பங்கேற்க, குறைந்த நபர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழுக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் முதல்வருடன் பதவியேற்க உள்ள, அமைச்சர்கள் குடும்பத்திலிருந்தும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது
பதவி ஏற்பு விழா முடிந்ததும், கலைஞர் நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்த இருக்கிறார். பின்னர் தலைமைச் செயலகம் சென்று, கொரோனா நிவாரண நிதியாக ஜூன் 3 ஆம் தேதி 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் ஸ்டாலின் கையொப்பமிட இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, வளாகத்தை புது வண்ணம் பூசி புனரமைக்கும் பணிகள், பெயர் பலகையை வடிவமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. GFX OUT
இந்த நிலையில், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலில் குரோம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
பின்னர் தியாகராயநகரில் எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்எம் வீரப்பனிடம் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்புகளின் போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே என்.நேரு மற்றும் பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தனர்.