தமிழ்நாட்டில், கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன், மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக இன்று முதல் 20-ந்தேதி வரை அதிகாலை 4 மணி வரை அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. பயணியர் இரயில், மெட்ரோ ரயில், அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை டாக்சிகள் 50 சதவிகித இருக்கைகளில் பயணிகளை ஏற்றி செல்லலாம். மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை கடைகள், டீக்கடைகள் மட்டும், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இறைச்சி, மீன் விற்பனை கடைகள், சனி, ஞாயிறு தவிர்த்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
அனைத்து உணவகங்களிலும், பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம். அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் இயங்கலாம். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
உள் அரங்கங்கள், மற்றும் திறந்த வெளிகளில், அரசியல், சமுதாயம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு அனுமதி கிடையாது. இறுதி சடங்குகள், ஊர்வலங்களில், 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சலூன்கள், பியூட்டி பார்லர்கள் செயல்பட அனுமதியில்லை. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் சென்னை மயிலாப்பூரில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மயிலாப்பூரில் காய்கறி, மளிகை, பல்சரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருந்துகடைகள் வழக்கம் போல் செயல்படும் நிலையில், தேவையின்றி யாரும் வெளியில் சுற்ற வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.