செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொழில்நுட்ப பிரச்சனையால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அடுத்தடுத்து 13 நோயாளிகள் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் அதிகமானோர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இரவு 10-மணி முதல் மருத்துவமனையில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூச்சுத்திணறி அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இறந்த நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினார். இதையடுத்து அதிகாலை 3 மணியளவில் டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டது.
இதனிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்த்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வலியுறுத்தி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.