திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் சட்டமன்ற தலைவராக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை அன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் புதிய எம்எல்ஏக்களால், திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக, மு.க.ஸ்டாலினை, துரை முருகன் முன்மொழிய, கே.என்.நேரு வழிமொழிந்தார். இதையடுத்து,சட்டமன்ற கட்சித் தலைவராக, தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் முன்னணித் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அரங்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்கள் வாழ்த்து முழக்கத்தை எழுப்பினர்.
திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், கட்சியின் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு வழங்கியுள்ள ஒப்புதல் கடித்ததை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து வழங்கி, தமது தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோருவார். இந்த சந்திப்பு புதன்கிழமை நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினை, ஆட்சியமைக்க முன்வருமாறு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுப்பார். இதையடுத்து, நடைபெறும் விழாவில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக, வருகிற 7ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். முன்னதாக, முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், யார், யார் அமைச்சர்களாக பதவியேற்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடும்.
கொரோனா பரவல் காரணமாக, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆளுநர் மாளிகைக்கு வருவோர் அனைவரும், கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, நெகடிவ் சான்றிதழோடு வருமாறு, ராஜ்பவன் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.