தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுக்க திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் 4ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்று அறிவித்தார்.
இதன்படி இன்று மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் மு.க,ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக ஒருமனத்துடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
எம்.எல்.ஏக்களால் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்துடன் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்.
ஆளுநர் அழைப்பின் பேரில் வரும் 7ம் தேதி எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடத்தப்பட உள்ளது. அன்றையதினம் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொள்கிறார்.