தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 153 ஆக உயர்ந்துள்ளது.
இதை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆலோசனைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க எத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆலோசனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்ற, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொடர்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.