சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். அவரது நீண்டகால அரசியல் பயணத்தையும், சந்தித்த சவால்களையும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி-தயாளு அம்மாளின் இரண்டாவது மகன் மு.க.ஸ்டாலின். இளங்கலைப் பட்டம் பெற்ற ஸ்டாலின், இளம் வயதிலேயே மிசா சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி சிறை சென்றார்.
திமுக இளைஞரணிச் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில், கலைஞரிடம் அவர் திராவிட அரசியலைப் பயின்றார்.
49 ஆண்டுகள் திமுக தலைவராகவும் 5 முறை முதலமைச்சராகவும் பணியாற்றிய கலைஞரின் நிழல் போல் இருந்து அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.
1996ல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் 2002 வரை பணியாற்றினார்.
நான்கு முறை திமுக சட்டமன்ற உறுப்பினராக ஆயிரம் விளக்குத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், 2011, 2016ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009-2011 ஆண்டுகளின் போது துணை முதலமைச்சராகவும் 2016ம் ஆண்டு முதல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். 2017ம் ஆண்டில் திமுகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2018ம் ஆண்டு கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமது அயராத பிரச்சாரம் மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்தார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
தி.மு.க. தொண்டர்களோடும், பொதுமக்களோடும் எப்போதும் நெருக்கமான தொடர்புடன் இருக்கும் ஸ்டாலின், அனைத்து கட்சியினருடனும் கட்சி மாச்சரியமின்றி நட்புடன் பழகக் கூடியவர். உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சி என உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.
நீட் எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மதச்சார்பற்ற அணிகளை ஒன்று திரட்டியது என அரசியல் அனுபவமும், துணிவும் மிக்கவராகச் செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். இதுவே அவருக்கு இத்தேர்தலில் மாபெரும் வெற்றி மாலையைச் சூட்டியுள்ளது.