சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் ஆகியோரும் அவர்களின் கட்சி வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். தேமுதிகவும் இத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலையில் இருந்து வந்தார். ஆயினும், கடைசி சுற்றில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
மக்கள் நீதிமய்யம் சார்பில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் படு தோல்வியைத் தழுவினர்.
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான் தோல்வியை சந்தித்துள்ளார். அங்கு 48 ஆயிரத்து 597 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இத்தேர்தலில் 56 ஆயிரத்து 153 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார்
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு 25 ஆயிரத்து 908 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அ.ம.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்துத் தொகுதியிலும் தோல்வியடைந்தது.
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இத்தேர்தலில் ஏமாற்றத்தையே கண்டது.