தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவில் மூத்த தலைவர்கள் சிலர் வெற்றி பெற்ற போதிலும், அமைச்சர்கள் பலர் தோல்வியை தழுவி உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடித்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆட்சி பொறுப்பு ஏற்று, கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த தொகுதியில் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை தோற்கடித்தார்.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று, முன்னிலை வகிக்கிறார். அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், பொள்ளாச்சி ஜெயராமன், பொளளாச்சி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணியும் வெற்றி பெற்றனர்.
சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதனால் ராயபுரத்தில் அமைச்சர் டி. ஜெயக்குமார், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின், ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பலரும் தோல்வியைத் தழுவினர்.
ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் டாக்டர் சரோஜா, ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 7 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கரூரில் அமைச்சர் M R.விஜயபாஸ்கர், ஆயிரத்து 750 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.