ஆறாவது முறையாக ஆட்சி செலுத்த கட்டளை இட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என்றும், மக்களுக்காக உழைக்க உள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். திமுகவிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவை கூட்டணிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய கலைஞர் வாழ்ந்த காலத்திலேயே,திமுக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டதாகவும், அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள மாபெரும் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாக்க உள்ளதாகவும், நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைப்பதாகவும், திமுக மீது வீசப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறுவதாகவும், மக்களுக்கு உண்மையாக இருப்பேன், மக்களுக்காக உழைப்பேன், என்றென்றும் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான் என்று அவர் உறுதி கூறியுள்ளார். இந்த வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், கூட்டணி இயக்கத்தினர் அனைவரும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.