தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் என 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், அரசியல் கட்சி முகவர்கள், செய்தியாளர்கள் என 2,527 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 28 அரசு ஊழியர்கள், 3 செய்தியாளர்கள், 61 அரசியல் கட்சி முகவகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அரசியல் கட்சி முகவர்கள் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்களுக்கு கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 135 முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.