கொரோனா நோயின் தீவிரத்தை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை மக்களிடம் பன்மடங்கு விலைக்கு விற்று சில மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நிலையில், இரவு ஊரடங்கை பயன்படுத்தி போலீசாரே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எப்படியாவது தங்கள் உறவினரை கொரோனாவில் இருந்து காப்பாற்ற ரெம்டெசிவர் மருந்தை பெற்றுவிட வேண்டும் என்று மணிக்கணக்கில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவுகள் ஒரு பக்கம்..!
அந்த மருந்தை பல மடங்கு விலை வைத்து விற்று கொரோனா பேரிடர் நேரத்திலும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மறுபக்கம்..!
தாம்பரத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் முகமது இம்ரான்கான் தனது காரில் அமர்ந்த நிலையில் 4 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ரெம்டெசிவர் மருந்தை 40 ஆயிரம் ரூபாய்க்கு விலை வைத்து விற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவருக்கு மருந்து சப்ளை செய்த திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கம்பவுண்டர் விக்னேஷும் சிக்கினார்
அவரிடம் இருந்து 17 ரெம்டெசிவர் மருந்துகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல புரசைவாக்கத்தில் ரெம்டெசிவரை 80 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர்களான சாம்பசிவம், ராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்
மின்ட் தனியார் மருத்துவமனையில் கூடுதல் விலைக்கு ரெம்டெசிவர் மருந்தை விற்ற தனியார் மருத்துவமனை மருந்தக உதவியாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இந்த பகல் கொள்ளையர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்ட இரு போலீசார் சிக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோனி செல்வத்தின் 17 வயது மகன் பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு 63,500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளான். 11 ஆம் வகுப்பு படிந்து வந்த அந்த மாணவனை இரவு ஊரடங்கை காரணம் காட்டி சில போலீசார் வசூல் நடத்திவரும் நிலையில்,வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட கோயம்பேடு பேருந்து நிலைய காவல்நிலைய குற்றப்பிரிவு காவலர்களான வேல்முருகன் மற்றும் அருண்கார்த்திக் ஆகியோர் மடக்கி சோதனையிட்டுள்ளனர்.
அதிகாலை 2 மணியளவில் பேருந்து நிலையத்தில் வைத்து மாணவனிடம் நடத்திய சோதனையில், அவன் சட்டை பையிலிருந்த 63,500 ரூபாய் பணத்தை போலீஸ்காரர்களான வேல்முருகன் மற்றும் அருண் கார்த்திக் இருவரும் பறித்துக் கொண்டு அந்த மாணவனை விரட்டியுள்ளனர்.
எங்கு செல்வது என தெரியாமல் விழி பிதுங்கிய மாணவன் இறுதியாக தனது தந்தை அந்தோனி செல்வத்திற்கு போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். வீட்டை விட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த தன்னிடம் இருந்த பணத்தை காவலர்கள் பறித்துக் கொண்டதாகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் கூறி கதறியுள்ளான்.
மதியம் கோயம்பேடு காவல் நிலையம் வந்த அந்தோனி செல்வம் கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியிடம், போலீஸ்காரர்களின் வழிப்பறி குறித்து புகார் தெரிவித்தார். இந்த புகாரோடு சேர்த்து இரண்டு காவலர்களையும் மதுரவாயல் உதவி ஆணையரிடம் அனுப்பி வைத்துள்ளார்.
முதற்கட்டமாக இரு காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்து கொள்ளையர்களை போல இந்த இரு வழிப்பறி போலீஸ்காரர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை..!
கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களிடம் இருக்கும் கடைசி சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் அட்டைப்பூச்சிக்களாக மாறி விடாதீர்கள் என்பதே மனிதநேயம் கொண்டவர்களின் வேண்டு கோளாக உள்ளது..!