பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், திட்டமிட்டடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏராளமானோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டனர்.
இந்த திட்டத்திற்காக பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்திருந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இன்னும் தடுப்பூசிகள் வழங்கப்படாமல் இருப்பதால், தற்போது பல்வேறு மாநிலங்கள் இன்று கொரோனா 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படாது என அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.
மத்தியப்பிரதேசத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு மே 1-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க முடியாது என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
தற்போது கையிருப்பில் குறைவான அளவே தடுப்பூசி இருப்பதால், அது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவைப்படுவதாக அவர் கூறினார்.
அதே போன்று டெல்லி, பஞ்சாப், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளன. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் இன்று தொடங்க வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.