சென்னையில் போலியான ஆவணங்களைக் காட்டி ரெம்டெசிவர் மருந்தை அரசின் சிறப்பு விற்பனை மையத்திலிருந்து வாங்கி, அதனை பலமடங்கு விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. ஒரு மருத்துவர் உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து கைது வேட்டை தொடர்ந்து வருகிறது.
சென்னை தாம்பரத்தில் காரில் அமர்ந்தவாறு ரெம்டெசிவிர் மருந்தை ஒரு பாட்டில் 20 ஆயிரம் ரூபாய் என கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர் முகம்மது இம்ரான், அவரது உதவியாளர் விஜய், இவர்களுக்கு மருந்தை விநியோகம் செய்த திருவண்ணாமலை அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
4ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள ரெம்டெசிவர் மருந்தை 8 ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவர் முகம்மது இம்ரானுக்கு விக்னேஷ் கொடுக்க, அதனை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார் அவர். இந்த நிலையில் சென்னை ஐசிஎப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னூர் நெடுஞ்சாலை பிள்ளையார்கோவில் அருகே ஒரு நபர் ரெம்டெசிவிர் மருந்து ஒரு பாட்டில் 15 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு விரைந்து சென்ற போலீசார், கார்த்திக் என்ற நபரை கைது செய்தனர்.
மிண்ட் பகுதியில் இயங்கி வரும் ஷாராவி ( SHARAAVE ) மருத்துவமனையில் மருந்தக உதவியாளராகப் பணியாற்றி வரும் கார்த்திக், போலியான ஆவணங்களை தயார் செய்து, கீழ்ப்பாக்கம் சிறப்பு விற்பனை மையத்தில் சமர்ப்பித்து, ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவனைப் போலவே, புரசைவாக்கம் பகுதியிலுள்ள நாராயணா மருத்துவமனை ஊழியர்கள் சாம்பசிவம் மற்றும் ராமன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
50 விழுக்காடு நுரையீரல் தொற்று பாதித்து, உயிர் போராட்டத்தில் இருப்பவர்கள், ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் என சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழலில் இணையம் வழியே ரெம்டெசிவர் மருந்துக்கான தேடலில் உள்ளோரின் விவரங்களைத் திருடி, போலியான மருத்துவச் சான்றிதழ், போலியான மருத்துவர் பரிந்துரைக் கடிதம், போலியான சி.டி.ஸ்கேன் அறிக்கை, அடையாளச் சான்று உள்ளிட்டவற்றைத் தயார் செய்து, ரெம்டெசிவிர் மருந்து வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படி கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் தெரிந்தால், 104 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலமும் http://www.drugscontrol.tn.gov.in/ என்ற வலைதளம் மூலமும் புகாரளிக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் அரசின் சிறப்பு விற்பனை மையத்தில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வரிசையில் காத்துக் கிடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்கள், ஆவணங்கள் உண்மையானவையா, போலியாக தயாரிக்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த முறையான கட்டமைப்புகள் தேவை என்ற குரலும் எழுந்துள்ளது.