உலகத் தொழிலாளர் நாளையொட்டி உழைக்கும் மக்களுக்குத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே நாள் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் விடுத்துள்ள செய்தியில், உழைக்கும் கைகளே உலகை உருவாக்கும் கைகள்’ என்று உலகம் உணர்ந்த திருநாளில், தளர்வறியா உழைப்பின் மூலம் தமிழகத்தை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலர் வைகோ விடுத்துள்ள செய்தியில், உழைப்பாளர்கள் ஒன்றுபட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.