மத்திய அரசிடம் கேட்கப்பட்ட ஒன்றரை கோடி தடுப்பூசி வந்த பின்பு தான், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை மையத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா தொற்று தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்க பயன்படும் 104 உதவி எண் இயக்கத்திற்கு, கூடுதல் கட்டுப்பாடு அறையும், பொதுமக்கள் தொடர்புக்காக சமூகவலைதள பக்கமும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரெமிடெசிவிர் மருந்து விற்பனையில் நிறைய தவறு நடக்கிறது என்ற ராதாகிருஷ்ணன், ரெமிடெசிவர் கையிருப்பு இரண்டு நாட்களில் அதிகரிக்கப்படும் எனவும் கள்ள சந்தையில் முறைகேடாக விற்பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மத்திய அரசிடம் ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கேட்டிருந்த நிலையில், அதில் எவ்வளவு ஒதுக்கப்படும், எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை என்று அவர் கூறினார். எனவே தடுப்பூசி கிடைத்த பின்னர் தான் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியும் என ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார்.