அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து தேவையில்லை என்றும் இந்த மருந்தால் ஜுரம், இருமலை இரண்டு நாள் குறைக்க முடியுமே தவிர உயிரிழப்பை தடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் சிலிண்டரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மற்றொரு புறம் ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைந்து திரிகின்றனர். இதனைப் பயன்படுத்தி சில இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து அனைத்து வகையான கொரோனா நோயாளிகளுக்கும் தேவைப்படும் மருந்து அல்ல என்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம். அந்த மருந்து கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் என பரவும் தகவல் உண்மையில்லை என்றும் அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அதே போன்று, ரெம்டெசிவிர் மருந்து கொடுப்பதால் ஜுரம், இருமலை இரண்டு நாள் குறைக்க முடியுமே தவிர உயிரிழப்பை தடுக்க முடியாது என்கிறார் தொற்று நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன். இது அனைவருமே கட்டாயம் பயன்படுத்த வேண்டிய மருந்து இல்லை என உலக சுகாதார நிறுவனமே அறிவுறுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆக்ஸிஜன் தேவைப்படும் நபர்களுக்கு தான் ரெம்டெசிவிர் வழங்கலாம் என்ற போதிலும், ஆக்சிஜன் செலுத்தவேண்டிய தேவை மிக மிக கூடுதலாக இருக்கும் பட்சத்தில் ரெம்டெசிவிர் மருந்து பயன்படாது என்றும் மருத்துவர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
காசநோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கு கொடுப்பதைப் போல் எந்தெந்த மருந்துகளை எப்போது பயன்படுத்தலாம் என்ற வழிமுறையை விரிவாக அரசு வெளியிடும் பட்சத்தில் இதுபோன்ற சிரமங்கள் மக்களுக்கு இருக்காது என்றும் மருத்துவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.