தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூலை 31 ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும், ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தேவை ஏற்பட்டால் இந்த உத்தரவு மறுஆய்வு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் குழு அமைக்க வேண்டும் என்றும், தாமிர உருக்காலை பிரிவுக்குள் யாரும் நுழையக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.