கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்திருப்பதாக சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தீவிரமாக இருந்த நேரத்தில், தமிழக அரசு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியை சிகிச்சை மையமாக மாற்றி சித்த மருத்துவர் வீரபாபுவிடம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த சிறப்பு மையத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு சிறப்பான முறையில் சித்தா சிகிச்சை அளித்து, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உயிரிழப்பு ஏதுமின்றி குணப்படுத்திய பெருமைக்குரியவர் சித்த மருத்துவர் வீரபாபு. பிறகு பல்வேறு காரணங்களினாலும் வைரஸ் தொற்று குறைந்ததாலும் அந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூடப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தன்னை மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு அழைத்திருப்பதாக சித்த மருத்துவர் வீரபாபு கூறியுள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் , விரைவில் தனது முடிவை அரசுக்கு தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது சாலிகிராமத்தில் ஒரு சிறிய வாடகை கட்டடத்தில் 25 படுக்கை வசதிகளுடன் உழைப்பாளி மருத்துவமனையை அவர் நடத்தி வருகிறார். தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா சிகிச்சைக்காக வருவதாகவும், போதுமான படுக்கை வசதி இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் திருப்பி அனுப்புவதாகவும் அவர் கூறினார்.
மே மாதம் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையத்தை உருவாக்கி வருவதாகவும் சித்த மருத்துவர் வீரபாபு கூறினார்.