ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டா இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் கண்டறியும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக சென்னையை சேர்ந்த மருத்துவர் கூறியுள்ளார். சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் ஐ.சி.எம்.ஆர் அனுமதிக்காக மருத்துவர் காத்திருக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய RT-PCR சோதனை உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த முறையில் சோதனை முடிவுகள் தெரிந்து கொள்ள மருத்துவர்களுக்கு குறைந்த பட்சம் 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் தான் கண்டறிந்துள்ள பிரத்தியேக கருவி மூலமாக ஒரு நிமிடத்திற்குள்ளாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உண்டா இல்லையா என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெகதீசன்
"நம் ஐந்து விரல்கள் உள்ளங்கை யுடன்" கூடிய அச்சு போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எளிய நவீன கருவியில் நம் ஐந்து விரல்களும் படும்படி வைத்தால் ஒரு நிமிடத்திற்குள்ளாக கொரோனா வைரஸ் நம் உடலில் இருக்கிறதா இல்லையா என்ற விவரத்தோடு சேர்த்து BP, temperature, Pulse,Hemoglobin மற்றும் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள் எவ்வளவு உள்ளது என்பதையும் மிகத் துல்லியமாக கண்டறிந்து கூறி விடுவதாகவும், இந்த முறை மூலமாக நேரம் குறைவதோடு வலி ஏதும் இல்லாமலும், மற்றவருக்கு நோய் தொற்று பரவாமலும் கொரோனா நோய் தொற்றை விரைவாக கண்டறிய முடிகிறது என கூறுகிறார் மருத்துவர் ஜெகதீசன்.
*KJ COVID TRACKER என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர்களுக்கு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்களின் உதவியோடு அங்கு உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை அதிகாரபூர்வமாக 487 பேருக்கு பரிசோதனை எடுத்து பார்த்ததில் இந்த கருவி யாருக்கெல்லாம் Positive எனக் காட்டியதோ, அதே நபர்களுக்கு RT-PCR சோதனையிலும் பாஸிட்டிவ் எனவும் இதில் நெகடிவ் என வந்தவர்களுக்கு மற்ற இரு சோதனை முறைகளிலும் நெகட்டிவ் என ஒரே மாதிரியாக வந்துள்ளதாக மருத்துவர் ஜெகதீசன் கூறுகிறார்.
மருத்துவர் ஜெகதீசனுடன் ஓமந்தூரார் மருத்துவமனையின் டீன் ஜெயந்தி உள்ளிட்ட 9 மருத்துவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் சேர்ந்து முழு வடிவம் கொடுத்துள்ள இந்த கருவி மூலம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள KJ மருத்துவமனையில் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று கருவிகளை வடிவமைத்து அரசு மருத்துவமனைகள், சென்னை ஐஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு கொடுக்கவும் பணிகள் நடைபெற்று வருவதாக மருத்துவர் ஜெகதீசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் "எந்த மருத்துவ கருவியாக இருந்தாலும் மத்திய அரசின் ICMR-இடம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்" என சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா கண்டுபிடிப்பு கருவிக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெற தான் விண்ணப்பிக்கவில்லை என்றும், தமிழக அரசு விரும்பினால் ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கருவியின் உண்மைத்தன்மையை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் தொற்று பரவல் வேகத்தை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டறியவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வுக்காக செலவிடப்படும் பல கோடி ரூபாய் பணம் வீணாவதும் தடுக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டாவது இதனை ஐ.சி.எம்.ஆருக்கு சுகாதாரத்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு