கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்ற ஏற்பாடுகளைச் செய்யக் கோரி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் என்றும், விதிகளைப் பின்பற்றாமல் அரசியல் கட்சிகள் விருப்பம் போல் பிரச்சாரம் செய்ததாக தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை எனத் தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.
தேர்தல் நாளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்கு, பிரச்சாரம் நடந்தபோதேல்லாம், வேற்றுக்கோளில் இருந்தீர்களா என நீதிபதிகள் வினவினர்.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 30ஆம் நாளுக்கு ஒத்திவைத்தனர்.