அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிபடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த 20-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளும் அடைக்கப்பட்டுள்ளன. பெரிய கடைகள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி இல்லாததால், சென்னையிலுள்ள அனைத்து ஷாப்பிங் மால்களும் பூட்டப்பட்டன. மளிகை மற்றும் காய்கறி கடைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
மாநகராட்சி, நகராட்சிகளிலுள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் படி, அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
புதுச்சேரி நீங்கலாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ - பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கும் இ -பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிகைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், புதிய கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.