செங்கல்பட்டு அருகே கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற அதிமுக பிரமுகர் குண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ்காரர் திருப்பிச் சுட்டதில் கூலிப்படை ரவுடி சம்பவ இடத்திலேயே பலியானான்.
செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் திருமாறன். அதிமுக பிரமுகரான திருமாறனுக்கு தொழில் போட்டி காரணமாக பல எதிரிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு திருப்போரூர் கூட்டுறவு சாலையில் இவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் இருந்து திருமாறன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதையடுத்து தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு வைத்த கோரிக்கையை ஏற்று இவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவருடைய மனைவி மறைமலை நகர் 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தல் நடக்காமல் நின்று போனது. தற்போது கூட திருமாறன் சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே உள்ள முருகர் கோவிலுக்கு சாமிகுப்பிடச் சென்றார் திருமாறன்.
அப்போது அங்கு முககவசம் அணிந்தபடி சாமிகும்பிட்டுக் கொண்டிருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது வெடிகுண்டு வீசியுள்ளது, நிலைதடுமாறிய திருமாறனை முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு மூன்று பேரும் தப்ப முயல பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொலையாளிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் சேலம் ஆத்துரை சேர்ந்த கூலிப்படை ரவுடியான சுரேஷ் என்பவன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானான். மற்றொருவன் காயத்துடன் சிக்கினான். ஒருவன் தப்பி ஓடிவிட்டான். தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி இந்த கொலை நடந்துள்ளதாகவும், கோவிலுக்கு வெளியில் இருந்து ஒருவன் கொடுத்த தகவலின் பேரில் கோவிலுக்குள் பதுங்கி இருந்த 3 பேர் இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.
திருமாறன் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அப்பகுதியில் திரண்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்
இருவரது சடலங்களையும் கோவிலில் இருந்து கைப்பற்றிய காவல் துறையினர் இந்த கூலிப்படையை ஏவியது யார் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் தேர்தல் முன்விரோதம் ஏதாவது இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.