10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ரெம்டெசிவிர் தயாரிக்கும் மாநிலங்களில் இருந்து அம்மருந்து தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், இதுவரை சுமார் 47 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், நாள்தோறும் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே வழங்குவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் டோஸ் உரிய தேதியில் செலுத்துவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு, அம்மருந்து உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் அளவிலும், தேசிய அளவிலும் கட்டுப்பாடுகள் உள்ளதால், உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, ரெம்டெசிவிர் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்துமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசிகள் உற்பத்திக்காக செங்கல்பட்டில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.