கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ள இரவு நேர ஊரடங்கின் 2-வது நாளில் பல்வேறு நகரங்கள் மற்றும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை நகரின் முக்கிய சாலைகள் ஆள்அரவமின்றி காணப்பட்டன. அண்ணாசாலை, காமராஜர் சாலை, சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுப்புக் கம்பிகளைப் போட்டு சாலைகளை மூடியிருந்தனர். கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை விசாரித்தபின்னரே அனுப்பி வைத்தனர். உரிய காரணமின்றி வந்தவர்களை கண்டித்த போலீசார், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர். நூற்றுக்கணக்கான போலீசார் விடிய விடிய ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் மூடப்பட்டது. போதிய காரணங்கள் இன்றி வீதியில் உலா வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரவு நேர ஊரடங்கால் பல்வேறு சாலைகள் இருள் கஜம் பூண்டது. முக்கிய வீதிகள் ஆள் அரவமின்றி காட்சி அளித்தது.
சேலத்தில் இரவு எட்டு முப்பது மணிக்கே சாலைகள் பேருந்து நிலையங்கள் வெறிச் சோடி காணப்பட்டது. மேலும் புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, சொர்ணபுரி, அழகாபுரம் சாலைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில் ஊரடங்கு நேரம் நெருங்கியும் மூடாத உணவகங்களை நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர். நகரின் முக்கிய சாலைகளான திருக்காம்புலியூர், லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், ஜவஹர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்பு அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.