காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச்சென்ற போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கும்பலாக சேர்ந்து அடங்க மறுத்து அத்துமீறி தாக்கியவர்களை இரும்பு பைப்பால் திருப்பி அடித்த இளைஞர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது இளைஞர்கள் மத்தியில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது டி- சர்ட் போட்ட இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.
பூப்போட்ட சார்ட், நீலக்கலர் டி சர்ட் போட்டு டீசண்டாக வந்திருந்த அந்த இளைஞருக்கு விழுந்த அடியால் அவரது டி சர்ட் சிதைந்த சர்ட்டானது. பலர் தடுக்க முற்பட்ட போதும் அடங்க மறுத்து, அவரை அடித்து ஆடைகளை கிழித்து அத்துமீறியது அந்த கும்பல்.
உடலில் உள்ள ஆடை வெளியே தெரிந்ததால் ஆவேசமான அடிவாங்கிய இளைஞர் திமிறி எழுந்து கர்ணன் பட தனுஷ் போல கையில் கிடைத்த இரும்பு குழாய் ஒன்றை எடுத்து திருப்பி அடிக்க ஆரம்பித்தார்.
தன்னை கும்பலாக சேர்ந்து தாக்கிய சில்வண்டுகளை விரட்டி விரட்டிச்சென்று அடித்தார். கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது.
இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் காவல்துறையினரின் மைக் சத்தம் கேட்டாலும் அடித்தவர்களை தடுக்கவோ, அடிவாங்கியவர்களை மீட்கவோ போலீசார் முயற்சிக்கவில்லை.
பட்டபகலில் அரங்கேறிய இந்த அட்டகாசத்தால் உணவகத்தில் இருந்த பொதுமக்களும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர் . இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு புகாரும் வராததால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லகூடிய இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்த அந்த அடிதடி அட்டாகாச காட்சியின் வீடியோ வெளியான நிலையில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.