தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே, 74 வயது தமிழ் ஆசிரியரின் மனைவி, தனது கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த கணமே உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையோருக்கு முன் உதாரணமாக அன்றில் பறவைகளாய் ஒன்றிவாழ்ந்த ஆசிரியர் தம்பதி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
காற்றுபுகக் கூட இடம் கொடுக்காமல் காதல் மொழி பேசி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் குடும்பத்துடன் கோர்ட்டு படியேறி விவாகரத்து பெற்று பிரிவது தற்போதைய தலைமுறையின் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாமல் திருமணத்தன்று இருமனதால் இணைந்த 70 வயதை கடந்த தம்பதியர், சாவிலும் கூட பிரியாத அதிசயம் தென்காசி அருகே நிகழ்ந்துள்ளது .
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்த 74 வயதான தமிழாசிரியர் சண்முகவேல். இவரது மனைவி ஜி ஜி பாய் அரசு பள்ளியில் இடை நிலை ஆசிரியைகாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
50 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணத்தால் இணைந்தனர் ஆசிரியர் சண்முகவேல், ஆசிரியை ஜி.ஜி.பாய் தம்பதியினர். கணவன் மனைவியின் அன்புக்கு அடையாளமாய் மூன்று ஆண்குழந்தைகளை பெற்றெடுத்து அதில் மூத்த மகனை தலைமை ஆசிரியராக உயர்த்திய இந்த தம்பதி. தனது 2 வது மகனுடன் சொந்த கிராமத்திலும், 3 வது மகன் தர்மபுரியிலும் வசித்து வந்தனர். பேரன் பேத்தி எடுத்த நிலையிலும் மனைவி ஜிஜி பாய் மீது மாறாத அன்பை கொண்டிருந்தார் சண்முகவேல்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சண்முக வேல் திடீரென செவ்வாய்கிழமை மரணமடைந்தார். சண்முக வேல் இறந்த செய்தியை கூறினால் தாய் ஜிஜி பாயின் உடல்நிலையும் பாதிக்கப்படக்கூடும் என்று கருதி மகன்கள் அவரிடம் கூறாமல் தவிர்த்துள்ளனர்.
அதிகாலையில் தங்கள் வீட்டுக்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்ததை கண்ட ஜிஜி பாய் மகனிடம் என்ன விஷயம் என்று கேட்க மகன்கள், தந்தையின் இறப்பை மறைத்துள்ளனர். ஆனாலும் நிலைமையை புரிந்து கொண்ட ஜி ஜி பாய் அவர் என்னை விட்டு போய் விட்டாரா? என்று அலறியபடியே பெரு மூச்சு வாங்கி தரையில் சாய்ந்துள்ளார். அடுத்த கணம் சம்பவ இடத்திலேயே ஜிஜி பாய் பரிதாபமாக உயிரை விட்டதால் அவர்களது மகன்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
வாழும் போது மனைவியை அன்பாக பார்த்துக் கொண்டது போல, சாகும் போதும் கூட பிரிய மனம் இல்லாமல் மனைவியை தன்னோடு அழைத்துச்சென்று விட்டாரோ ? என்று உறவினர்கள் கதறி அழுதனர். இந்த இணை பிரியா மரணங்கள் குலசேகரன்கோட்டை கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரில் உள்ளோர் வந்து இருவருக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்
கண்டதும் காண்டாகும் இளையதலைமுறை தம்பதியினருக்கும், கண்டதுக்கு எல்லாம் சண்டையிடும் இல்லத்தரசிகளுக்கும், குடிப்பதையும் மனைவியை அடிப்பதையும் கொள்கையாக கொண்ட குடிகார கணவன்மார்களுக்கும், இல்லறம் என்றால் என்ன என்பதை அன்றில் பறவைகளாய் வாழ்ந்து காட்டிச்சென்றுள்ளனர் இந்த ஆசிரியர் தம்பதியினர்..!