வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 11 நாட்களே மீதமுள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் கள்ள ஓட்டு போடுவதற்கு, கண்டெய்னர் லாரிகளில் அமர்ந்து, வாக்குச்சாவடிகளை மர்ம நபர்கள் கண்காணிப்பதாக பரவிய தகவலால், வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாக்கும் அரசியல் கட்சியினர் கலங்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காமாலைக் கண்ணுக்கு பார்ப்பது எல்லாமே மஞ்சளாக தெரியும் என்பார்களே, அதேபோன்ற ஒரு ஜென் மனநிலைக்கு வாக்குப்பெட்டியைப் பாதுகாக்கும் தமிழக அரசியல் கட்சியினர் மாறியுள்ளனர்.
வெற்றுப்பெட்டி தொடங்கி கண்டெய்னர் வரை, டிரோன் கேமரா தொடங்கி வைஃபை வரை அரசியல் கட்சியினரை அலர்ட்டாக வைத்திருக்க அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வாக்குப்பெட்டி வைத்திருக்கும் மையத்தை சுற்றிவந்து கொண்டேயிருக்கின்றது.
தென்காசியில் வாக்கு சாவடியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இறக்கிவைக்கப்பட்ட கண்டெய்னரில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதாக பரவிய தகவலால், இறங்கப்பட்ட வேகத்திலேயே அந்த காலி கண்டெய்னரை இடத்தை விட்டே காலி செய்ய வைத்தனர் திமுகவினர்.
புதுக்கோட்டை மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை வாகனத்தில் இரண்டு பெட்டியில் பழுது நீக்கும் உபகரணங்கள் ஸ்க்ரூட்ரைவர் உள்ளிட்ட சாதனங்கள் கொண்டுவரப்பட்டதை வாக்குச்சாவடி பாதுகாப்பில் உள்ள திமுக முகவர்கள் பிடித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வெற்று டிரங்க்பெட்டியை பார்த்து அச்சப்பட்டு அரசியல் கட்சியினரால் அதற்கும் இரண்டு சிசிடிவி காமிராக்கள் பொருத்தி கண்காணிக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையத்தை கழுகுப்பார்வையில் படம் பிடித்த ட்ரோன் காமிராவையும் படம் பிடித்த சென்னையைச் சேர்ந்த குழுவினரையும் சுற்றிவளைத்த அரசியல் கட்சியினர் போலீசில் ஒப்படைத்தனர்.
எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக துறைமுகத்திற்கு ஏற்றுமதிக்காக தேங்காய் நார் லோடு ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் ஒருவர் விருத்தாசலத்தில் தனது மனைவி குழந்தைகளை பார்த்து வருவதற்குள் பீதியான அரசியல் கட்சியினர், அந்த கண்டெய்னரில் இருந்தபடியே வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்து கள்ள ஓட்டு போடுவதற்காக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறி பீதியை கிளப்ப அந்த ஓட்டுனர் லாரியை கிளப்பிச் சென்றார்.
விருத்தாசலத்தில் வேறொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அதே கண்டெய்னர் லாரியை மீண்டும் பிடித்து கலெக்டரிடம் ஒப்படைத்து அதனை திறந்து பார்க்கக்கோரி அடம் பிடித்தனர், சீனாவுக்கு அனுப்பப்பட உள்ள சீல் வைக்கப்பட்ட அந்த கண்டெய்னரை சுங்கத்துறையினர் மட்டுமே திறந்து பார்க்கமுடியும் என்று விளக்கம் அளித்தார் லாரி ஓட்டுனர்.
அரசியல் கட்சியினர் சந்தேகம் கொள்வது போல ஆன்லைன் மூலமாகவோ, ஹேக் செய்தோ வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது என்றும், ஒருவேளை இவர்கள் சொல்வது போல வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளை மாற்றி விட்டால், கட்சியின் சின்னம் பிரிண்டாகி விழும் விவி பேட் பாக்சில் உள்ள சீட்டை எப்படி ஹேக் செய்ய முடியும்? அல்லது அதில் ஏற்கனவே உள்ள சீட்டை எப்படி அகற்றமுடியும் ? என்று தேர்தல் அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதே நேரத்தில் வாக்குச்சாவடி பாதுகாப்பில் உள்ள அரசியல் கட்சியினர் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.