விருத்தாசலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே நிறுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் புகாரின்பேரில், கண்டெய்னர் சோதனையிடப்பட உள்ளது.
விருத்தாசலத்தில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கலைக்கல்லூரி அருகே நேற்றிரவு கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்ததால், லாரியை வேறு இடத்தில் நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த கண்டெய்னர் லாரி, இன்று காலை சற்றுதள்ளி புதுக்குப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்ததால், திட்டக்குடி திமுக வேட்பாளர் சி.வி.கணேசன், விருத்தாசலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் சார்ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் இருவரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஓட்டுனரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு தேங்காய்நார் ஏற்றிக்கொண்டு செல்வதாகவும், வழியில் மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டுச் செல்வதற்காக நிறுத்தியிருந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு அனுப்ப வேண்டி ஏற்றுமதி சரக்கை கொண்டு செல்வதால், கண்டெய்னரை அமலாக்கத்துறையினரே திறந்து சோதனை போட முடியும் என்பதால், மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் சார்ஆட்சியர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.