கொரோனா பரவல் காரணமாக, அரசு அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சர்வதேச சுற்றுலாதலமான திரிவேணி சங்கமம், விவேகானந்த மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் திற்பரப்பு அருவி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. திருவள்ளுவர்சிலை, விவேகானந்தா பாறைக்கு செல்லும் படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திற்பரப்பு அருவி நுழைவு வாயிலும் பூட்டப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அத்தியாவசிய பணிகளுக்கு வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஏற்காட்டிலுள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. தடையுத்தரவை அறியாமல் வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மோயர் சதுக்கம், பைன் forest, குணா குகை மற்றும் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, படகு குழாம், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைக்கு செல்லும் வழிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், திருச்செந்தூர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அனைத்து நாட்களிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். நாழிக்கிணறு பகுதியில் பக்தர்கள் வழக்கம்போல புனித நீராடலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வர விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி சுற்றுலா பயணிகள் சிலர் வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கலுக்கு தடையை மீறி பேருந்துகளிலும் கார்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா, கோத்தகிரியில் கோடநாடு காட்சிமுனை என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. நாளை முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.