தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பியதாக 31 வயது பெரம்பலூர் இளைஞர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ISIS தீவிரவாதியா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இருந்து வேலைக்கான விசாவில், ஓராண்டுக்கு முன்பு துபாய் சென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞருக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டுக்கு செல்லக்கூடாது என மத்திய அரசு விதித்திருந்த தடை மீறப்பட்டு உள்ளது. இவர், துபாயில் இருந்து ஏமன் சென்றதும், அங்கு 6 மாதங்கள் வரை தங்கி இருந்ததும் குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏமனில் இருந்து துபாய் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பிய பெரம்பலூர் இளைஞர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தடையை மீறி ஏமன் சென்ற இவர், ஒருவேளை, ISIS சர்வதேச தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக இருக்கக் கூடும் என மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள்,சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்த இளைஞர், தாம் ஏமன் சென்று திரும்பியதை ஒப்புக்கொண்டார். துபாயில் தமக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், இதனால், வேலை தேடி, ஏமன் சென்றதாகவும் இவர் விளக்கம் அளித்தார்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் எவர் ஒருவரும் ஏமன் நாட்டுக்குள் நுழைய முடியாது என்ற சூழலில், இவரை அந்நாட்டுக்குள் அனுமதித்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தவறுக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? என்பது குறித்தும் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய குற்றப்பிரிவு மற்றும் பெரம்பலூர் காவல்துறை உதவியுடன் இந்த இளைஞரின் பின்னணி குறித்து முழு விவரங்களையும் கண்டுபிடிக்கும் பணி, மற்றொரு பக்கம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் பெரம்பலூர் இளைஞர் குறித்த முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.