வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர், அவர் பேரன்கள் இருவர் என மொத்தம் 3 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காட்பாடியை அடுத்த லத்தேரியில் பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு விற்பனை மையத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்தின்போது மோகனின் பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகியோர் உள்ளே இருந்ததால் அவர்களை வெளியே அழைத்து வர மோகன் உள்ளே சென்றார். அப்போது பட்டாசு அனைத்தும் வெடித்துச் சிதறியதில் மூவரும் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து உடல்களை மீட்டுக் கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.