தமிழகத்தில் அடுத்த இருநாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதற்கு அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளா முதல் உள் கர்நாடகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தின் பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
16 ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 17 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 18,19 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.