ராஜபாளையம் அருகே நண்பர் கொலைக்கு பழி வாங்கும்விதமாக ஒரு ஆண்டுக்கு பிறகு திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கி சேத்தூர் கிராமத்தில் கடந்த ஆண்டு தாமரைக்கனி என்ற மாநில அளவிலான கபடி வீரர் கொலை செய்யப்பட்டார். தாமரைக்கனிக்கு கபடி வீரர் என்பதால் ஏராளமான நண்பர்கள் உண்டு. தாமரைக்கனி கொலை தொடர்பாக திமுக ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை ஈஸ்வரன் உள்ளிட்ட 6 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அண்ணாமலை ஈஸ்வரன் தனது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று பயந்து நாகர்கோவிலில் வசிக்க தொடங்கியுள்ளார்.
தமிழ் புத்தாண்டான நேற்று சேத்தூர் பகுதியில் உள்ள கரையடி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும்,அண்ணாமலை ஈஸ்வரனை கொலை செய்ய தாமரைக்கனியின் நண்பர்கள் முயன்று வருவதால் எதிர்தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, தாமரைக்கனியின் நண்பர்கள் குழந்தைவேல் குமார், மதியழகன், ஜெகதீசுவரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அண்ணாமலை ஈஸ்வரனை கொன்று முகத்தை சிதைத்து விட்டு தப்பி விட்டனர்.
கொலைச் சம்பவம் குறித்து ராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளராக சங்கர் தலைமையில் சேத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்டமாக இந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தன் நண்பனின் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கத்தில் கடந்த ஓராண்டு காத்திருந்து பழி தீர்த்த நண்பர்கள் இந்த பழிக்கு பழி கொலையினால் கிருஷ்ணாபுரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.