மயிலாடுதுறை அருகே மினி கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து, ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
குத்தாலம் அருகே சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த அந்த மினி கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர், அவ்வழியாக வந்த ரோந்துப் போலீசாரைப் பார்த்ததும் பதற்றமாகி ஒளிந்துள்ளார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, சம்மந்தமில்லாமல் முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டியிருக்கிறார்.
இதனையடுத்து லாரியை பரிசோதித்த போலீசார், அதன் வெளிப்புற நீளமும் உட்புற நீள அளவும் வேறுபடுவதை கண்டறிந்தனர். லாரியின் மேற்புறத்தில் ஏறிப் பார்த்தபோது, முன்பகுதியில் ரகசிய அறை இருந்ததும் அதற்குள் 30 கேன்களில் ஆயிரத்து 50 லிட்டர் எரிசாராயம் இருப்பதும் தெரியவந்தது. அவற்றை சிதம்பரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு கடத்திச் சென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷை கைது செய்தனர்.