வங்கியில் பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்துள்ள வயதான நபர்களை குறி வைத்து அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஜவஹர்நகரை சேர்ந்த சந்திரமதி ஆசிர்வாதம் என்பவர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அரிகுமார் என்பவர் ஸ்ரீராம் அசோசியேட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் கூறியதை நம்பி 15 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தாகவும், ஆனால் வட்டியும் கொடுக்காமல் முதலீடு செய்த பணத்தையும் தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அரிகுமாரின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கொண்டு சைபர் குற்றப்பிரிபு போலீசார் ஆய்வு செய்து, திருப்போரூரில் வசித்து வந்த அவனை கைது செய்தனர்.
தனியார் வங்கியில் வேலை செய்து வந்த அரிகுமார் 2 ஆண்டுகளுக்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டான். அங்கு பணிபுரிந்த போது பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் வயதான நபர்களின் விவரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான்.
ஸ்ரீராம் அசோசியேட்ஸ் என்ற தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால், பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக வட்டி மற்றும் லாபம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி காசோலைகளை பெற்றுள்ளான். இது போல 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை பணத்தை அபகரித்துக் கொண்டு அரிகுமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவனிடம் இருந்து 50 சவரன் தங்க நகைகள், ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பங்குச்சந்தையில் அவன் முதலீடு செய்திருந்த சுமார் 90 லட்சம் ரூபாய் மற்றும் அவனது மனைவி பெயரில் இருந்த பங்குச்சந்தை முதலீடு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகியவற்றின் வங்கி கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.