அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், தனியார் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தொழிற்சாலை நிர்வாகம் முன்வந்தால் உதவிட அரசு தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை நகரில் காய்ச்சல் முகாம்களை 200லிருந்து 400 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், தகுதியான பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனியார் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தொழிற்சாலை நிர்வாகம் முன்வந்தால் உதவிட அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.