இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவச் சிறுவர்கள் உதவியுடன் கடற்கரையை சுத்தம் செய்யும் தனியார் கடல் விளையாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்று, அவர்களுக்கு கட்டணமின்றி கடல் விளையாட்டுகளை கற்றுக்கொடுக்கிறது.
பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், கடற்கரைகளில் வீசிச் செல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவைச் சந்திக்கின்றன. இந்த நிலையில், இராமேஸ்வரம் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஸ்கூபா டைவிங், வாட்டர் ப்ளோட்டிங் உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் “குவெஸ்ட் அகாடமி” (QUEST ACADAMY ) என்ற நிறுவனம் அவ்வப்போது கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த தூய்மை பணியில் தங்களுக்கு கைகொடுக்கும் ஏழை மீனவ சிறுவர்களுக்கு, அந்நிறுவனம் இலவசமாக கடல் விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து வருகிறது.
அரை மணி நேரம் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தால் அடுத்த ஒரு மணி நேரம் அந்தச் சிறுவர்கள் உற்சாகமாக கடல் விளையாட்டுகளுக்குள் மூழ்கிவிடுகின்றனர்.
கடற்கரை பகுதி சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதை சிறுவயதிலேயே உணர்த்தினால், ஆரோக்கியமான தலைமுறை உருவாவது எளிதாகிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.....